Covid19அரசியல்தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகிய Gobackstalin…ஏன்..?

இன்று கோவைக்கு செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வர வேண்டாம் எனக்கூறி #Gobackstalin என டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வருகை தரும் போதெல்லாம் திமுகவினர் ‛GoBackModi, GoBackAmitshah’ என்னும் ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர். தற்போது, அதுவே, திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவிட் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்று கோவை செல்கிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட திமுக கூட்டணி வெற்றிப்பெறவில்லை. முழுவதும் அதிமுக, பா.ஜ., அடங்கிய கூட்டணியே கைப்பற்றியது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி விட்ட நிலையில், கோவையில் மட்டும் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவு கோவிட் பாதிப்புகளை கொண்டுள்ள கோவையில் பாரபட்சம் பார்க்காமல் தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து செயல்படுத்திட பலத்தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கோவிட் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் செல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளமான டுவிட்டரில் ‘GoBackStalin’ என்னும் ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். கோவையை பாரபட்சமாக பார்த்துவிட்டு இப்போது ஆய்வு நடத்துவது போன்று நடிக்க வருகிறார் என பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இந்த ஹேஸ்டேக் டிரெண்டானது. இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் இந்த ஹேஸ்டேக் மூலம் கருத்து பதிவிட்டுள்ளனர்.