தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ,தேனி ,திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ,திருச்சி, பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ,வேலூர் ,திருப்பத்தூரில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வருகிற 17-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ,திருவண்ணாமலை, நீலகிரி ,கோயம்புத்தூர் ,திருப்பூர் ,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் ,நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16, 17 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா – கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மேற்கூறிய நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.