தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் நேர்ந்த முதல் மரணம்…
தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்டபோதிலும் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கடந்த 90 நாட்களில் கொரோனா பாதிப்புக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் இந்த முதல் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கொரோனா பாதித்தவர்கள் அதிகமாவதற்கு பிஏ4, பிஏ5 வகை வேரியண்ட்தான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முகக் கவசம் அணிவதும் , சமூக இடைவேளையை கடைபிடிப்பதும்தான். இதற்கு சரியான தீர்வு என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் துணை நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 1,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 984 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், கோவையில் 118 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரேனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 34,18,481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.