அரசியல்தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி புதிய மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை , வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தற்காலிக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவித்திக்க மறுப்பு தெரிவித்ததோடு, அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மனுதாரர் சூரியமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவரணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொண்டர்களுக்கு வாய்பளிக்காமல் நடத்தப்பட்ட தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுகுழுவை நடத்துவது சட்டத்திற்கு எதிரானது எனவும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.