அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு…!
அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் மாதம் தொடக்கம் முதலே தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அசாமில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
5,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 54. 7 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோபிலி, திசாங் மற்றும் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்தும், விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி, சுமார் 99 ஆயிரத்து 026 ஹெக்டேருக்கும் மேல் விளைநிலங்கள் வீனாகியுள்ளன. மழை ஒருபுறம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கனமழையால் அசாமில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுதும், 2.17 லட்சம் பேர் மீட்கப்பட்டு 564 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதிலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விமானப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சமாக குறைந்துள்ளது.