எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழகத்தில் நேற்று 1,461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 69 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 543 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் பலியாகாத நிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. 8,222 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத தொற்று என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் உட்பட இருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முன்னாள் சபாநாயகர் தனபால் , முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இருவருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனபால் மருத்துவர் ஆலோசனையின்படி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் . ஒற்றை தலைமை விவகாரத்தில் கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.