தமிழ்நாடு

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை உயர்வு..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…

விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகரில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 20 ரூபாய் அதிகரித்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை எண்ணெயும் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் 130 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 175 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கடலை எண்ணெய் 15 லிட்டர் 50 ரூபாய் உயர்ந்து 2,900 ரூபாய் ஆகவும், நல்லெண்ணெய் 15 லிட்டர் 166 ரூபாய் உயர்ந்து 4,868 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பாமாயில் 15 லிட்டர் 220 ரூபாய் குறைந்து 2,040 ரூபாய் ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் 15 லிட்டர் ரூ.2,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் நிலக்கடலை பருப்பு 80 கிலோ 7,000 ரூபாய் ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ 4 ஆயிரம் ரூபாய் ஆகவும், எள்ளு புண்ணாக்கு 50 கிலோ 2 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ மூடை 20 ரூபாய் உயர்ந்து 3,820 ரூபாய்க்கும், கொண்டைக்கடலை குவிண்டால் 4,200 ரூபாய் ஆகவும் விற்பனையானது.