அரசியல்தமிழ்நாடு

மக்கள் வெள்ளத்தில் நெய்தல் – தூத்துக்குடி கலை விழா

நம் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் முன்னெடுப்பில் “நெய்தல் – தூத்துக்குடி கலை விழா” தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி.கல்லூரி மைதானத்தில் கடந்த 07/07/2022 அன்று தொடங்கி நாளை 10/07/2022 வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான இன்று (09/07/2022) சனிக்கிழமை, பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் திரண்டிருந்ததால் ஒட்டுமொத்த மைதானமும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசித்திப்பெற்ற உணவு வகைகளும் இந்த நெய்தல் திருவிழாவில் இடம்பெற்றிருந்ததனால் பொதுமக்கள் தங்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவருந்தி இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மகாமுனி குழுவினரின் சக்கைக் குச்சி ஆட்டத்தில் துவங்கிய இன்றைய நிகழ்ச்சி சகா குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி, கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, காரமடை சாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம், ஹாஜி ஜான் பாவா குழுவினரின் சிலம்பாட்டம், சமர் குழுவினரின் பறையாட்டம், ஓம் முத்துமாரி குழுவினரின் கலைநிகழ்ச்சி செந்தில் & ராஜலட்சுமி இசைநிகழ்ச்சி மற்றும் அதனை தொடர்ந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் தொடர்ந்து புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது!

இன்றைய நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திருமிகு.கீதா ஜீவன், திரு.அனிதா இராதாகிருஷ்ணன், திரு.மனோ தங்கராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் தொண்டரணி செயலாளருமான திருமிகு.ஹெலன் டேவிட்சன், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் திருமிகு.குமரி விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு விழாவினை கண்டு மகிழ்ந்தனர்!