இந்தியா

தலைமறை சாமியார் நித்தியானந்தாவிற்கு 18 அடி உயரத்தில் சிலை…! புதுச்சேரியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்…

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் தலைமறை சாமியார் நித்தியானந்தாவிற்கு 18 அடி உயரத்தில் சிலை வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியா நாட்டில் உள்ள முருகன் கோவிலை போல அப்பகுதியில் ஒரு கோவிலை கட்டி வந்துள்ளார்.

இந்த கோவிலில் 27 அடி உயரத்தில் முருகன் சிலையும், 18 அடி உயரத்தில் மற்றொரு சிலையும் அமைக்கப்பட்டு வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனிடையே அந்த கோவிலின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட 18 அடி உயர சிலை, தலைமறைவான சாமியார் நித்தியானந்தாவை போலவே இருந்தது. நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.

இந்நிலையில், கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த போது அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவது போன்ற புகைப்படங்கள் அதிகளவில் இருந்தது. மேலும் அவர் நித்தியானந்தாவின் புகைப்படத்திற்கு பூஜை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் நித்தியானந்தாவின் தீவிர சீடர் என்பது தெரியவந்துள்ள நிலையில், நித்தியானந்தாவின் 18 அடி சிலையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சீடர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு 18 அடி உயரத்தில் சிலை வைத்துள்ள சம்பவம் புதுசேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.