விளையாட்டு

சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல்..! முதலிடம் பிடித்தார் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா…

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் பேட்டிங்க், பந்துவீச்சு, மற்றும் ஆல்ரவுண்டரில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 718 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் முதல் இடத்தை கைப்பற்றினார். நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட், பாகிஸ்தான் வீரர் சாஹீன் அப்ரிடி ஆகியோர் 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளனர்.

இதேபோல் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த பாபார் அசாம் முதல் இடத்திலும், இமாம் உல் காக் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த விராட் கோலி மூன்றாம் இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.

சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் வங்க தேசத்தை சேர்ந்த சகிப் அல்ஹசன் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி இரண்டாம் இடத்திலும், ரஷித் கான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் ஒருவர் கூட முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.