அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன – அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் இதுவரை, 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரர், முன்னுார் ஆடவல்லீஸ்வரர் மற்றும் பாதிராபுலியூர் கோவில்களில், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன், சேர்மன் தயாளன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், துணைச் சேர்மன் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மரக்காணம் பூமீஸ்வரன் கோவிலில் 80 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 85 லட்சம் ரூபாய் செலவில் தேர், 8 லட்சம் ரூபாய் செலவில் குளம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கோவில் இடம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது உள்ளிட்ட, அனைத்து விதமான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோவில்களில் திருப்பணி செய்து, குடமுழுக்கு செய்ய, இதுவரை இல்லாத அளவுக்கு, 100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் 80 கோவில்களில் இந்த ஆண்டு குடமுழுக்கு செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து, எங்கள் துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் வரை, 200 கோடி ரூபாய் வாடகை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.