தமிழ்நாடு

கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டிருந்தது.

வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது போல், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முதல் கனமழை தாறுமாறாக பெய்து வருகிறது. நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்தது.

திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிக கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .