தமிழ்நாடு

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்திற்கு அருகே உள்ள இந்திய ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் பயங்கரவாதிகளால் 3 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர் .

முகாமிற்குள் நுழைந்த 2 பயங்கரவாதிகளும் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன். மற்ற இரு வீரர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் .

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது . மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர் . இதையடுத்து ராணுவ வீரர் லட்சுமணன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. டி புதுப்பட்டியில் அஞ்சலிக்கு பிறகு அரசு மரியாதை உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.