இந்தியா

1,000 தடவை ரெய்டு நடத்தினாலும் ஒன்னும் சிக்காது – மணிஷ் சிசோடியா சவால்

சிபிஐ ஆயிரம் தடவை சோதனை செய்தாலும் தன்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மது விற்பனை உரிமம் வழங்கும் நடைமுறையை மாற்றி, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஐ ஆயிரம் தடவை சோதனை செய்தாலும் தன்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் இன்று பேசிய மணீஷ் சிசோடியா, என்னுடைய வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் 14 மணி நேரம் நடத்திய சோதனையில் ஒரு பைசா கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்னும் 1000 ரெய்டுகளை நடத்துங்கள், ஆனால் நீங்கள் என்னிடம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.