நடிகை மீரா மிதுன் தலைமறைவு- நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது.
திரைப்படத் துறையில் பட்டியலின, பழங்குடியினர் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்கில், சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீரா மிதுனும் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஜர்படுத்தப்படுவார் என அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது