அனைத்து சாதியினரும் அர்ச்சகர் : தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
தமிழக கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த அனைத்து சாதியினருமே அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற விதியினை கொண்டுவந்தது. அதன்படி கடந்த ஆண்டு பயிற்சி முடித்த 29 ஓதுவார்கள் உள்பட 58 பேர் பல்வேறு தமிழக கோயில்களில் பணியமர்த்தப்பட்டனர். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு பலரும் பாரட்டுக்களை தெரிவித்தனர். ஆனால் இந்த திட்டத்தால் ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் நீக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் மு .க. ஸ்டாலின் ஏற்கனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கம் செய்யப்படவில்லை எனவும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை சீர்குலைக்க இதுபோன்ற சதிகள் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது என பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி கூறிவந்தார். இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை ஸ்டாலினுக்கு யார் கொடுத்தது என்றும் சாடினார். அத்துடன் பல்வேறு சட்டங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தை நாடிய அவர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடைக்கால தடை கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் நியமிக்கும் முடிவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீது தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி நிலுவையில் உள்ள ரிட் மனுக்களுடன், சுப்பிரமணியன் சுவாமியின் ரிட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.