அரசியல்தமிழ்நாடு

மருத்துவமனையில் டிடிவி தினகரன்..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர் நேற்று முதல் காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

இதனால் தஞ்சையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தினகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :

சிறிய உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு ஒரு சில நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம் . தயவு செய்து நேரில் பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .

இந்நிலையில் இதுகுறித்து மீனாட்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது :

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வயிற்றுவலி, வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற சில காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. அத்துடன் அவரது உடல்நிலை மருத்துவ குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.