இன்று விண்ணில் பாய்கிறது நாசாவின் ஆர்டெமிஸ் -1 ராக்கெட்..
நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவுகிறது.
சுமார் 53 ஆண்டுகள் கழித்து நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ‘ஆர்டெமிஸ்’ என்ற திட்டத்தை நாசா தொடங்கியிருக்கிறது. இதில் மனிதர்களை அனுப்பி, நீண்ட காலம் நிலவில் தங்க வைத்து ஆய்வு செய்யவும் ஏற்ற வகையில் இந்த பயணத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பவுள்ளது. அதன்படி, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி மாலை 6.03 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுனும் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 4 என்ஜிகளில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த ஆர்டெமிஸ் திட்டம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டது. பின்னர் என்ஜினை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவவுள்ளதாக நாசா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புளோரிடா நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு ( இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு) ராக்கெட் ஏவப்படுகிறது. ஆர்டெமிஸ்-1 ராக்கெட் அனுப்பும் நிகழ்வானது நாசாவின் அதிகாரப்பூர்வ வலைதளம், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.