பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழையால் மழைநீரில் மூழ்கிய பகுதிகள்..
பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள மகாதேவபுரா, பொம்மனஹள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேர்ந்தது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. சர்ஜாபூர் சாலை, வெளிவட்ட சாலை உள்ளிட்ட பகுதிகள் ஏரிகளை போல காட்சி அளித்தன.
42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபடியான மழை பெய்ததால், பெங்களூரு வெள்ளநீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல வேண்டிய ஐடி ஊழியர்கள், டிராக்டர்கள், படகுகளை வரவழைத்து அவற்றின் உதவியுடன் அலுவலகத்திற்கு சென்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு நகரில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்தது. இரவு முழுவதும் நீடித்த மழையால், அவதிக்குள்ளான ஊழியர்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். மாநகரில் எங்கும் வாகன சேவை கிடைக்கவில்லை என்றும், சில ஓட்டுநர்கள் கிலோ மீட்டருக்கு 200 ரூபாய் வரை வசூலிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், பெங்களூரு மாநகருக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.