கண்ட கனவு நிறைவேறியது : தினேஷ் கார்த்திக் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீரர் அஸ்வின் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
காயம் காரணமாக ஜடேஜா உலகக்கோப்பை அணியில் இடம் பெறவில்லை. 20 ஓவர் உலகக்கோப்பையில் இடம் பெற்றுள்ள அணி வீரர்கள் விவரம்:- ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), வீராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, ஆர்.அஸ்வின், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
மாற்று வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர். உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட உள்ளதால் 37 வயதான தினேஷ் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இதன் மூலம் தனது கனவு நனவானதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைத்தது.
20 ஓவர் அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற தினேஷ் கார்த்திக்குக்கும், ரிஷப் பண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.