திமுக-வில் இருக்கும் சீனியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கடை திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் மையப்பகுதியாக தமிழ்நாடு செயல்படுகிறது. இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கஞ்சா புழக்கத்தில் உள்ளது.
திமுக அரசு தெளிவில்லாத அரசாக உள்ளது. திமுக அமைச்சர்கள் மக்களை தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையில் பேசுவது தொடர்கதையாகி வருகிறது. மக்கள் என்னி நகையாடும் வகையில் தான் இந்த அரசு செயல்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து என்பதை அமைச்சர்கள் கேவலப்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மனவேதனையோடு பேருந்தில் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு இலவச திட்டங்களை விலையில்லா திட்டங்கள் என்று அறிவித்தவர் ஜெயலலிதா. நாகரீகமான அரசு அதிமுக அரசு அனாகரிகமான அரசு திமுக அரசு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மராத்தான் துறை அமைச்சர் என்று ஒரு துறையை ஏற்படுத்தி கொடுத்தால் நல்லது. அதுபோல பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அமைச்சர் என்று துறையை மாற்றி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று
விமர்சனம் செய்தார்.
திமுக அரசு நடத்திய விழாவை திமுக அமைச்சரே புறக்கணித்தார் என்றால் அது மா.சுப்பிரமணியன் தான். திமுகவில் சீனியர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார். எப்படி மு.க.ஸ்டாலினை கொண்டுவர, கருணாநிதி வைக்கோவை வெளியேற்றினாரோ அதுபோல உதயநிதியை கொண்டுவர சீனியர்கள் அனைவரையும் வெளியேற்றி வருகின்றனர் என ஜெயக்குமார் தெரிவித்தார்.