விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி

டி20 உலக கோப்பை தொடரில் 6வது தகுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

8-வது டி 20 உலக கோப்பை தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 அணிகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 5 தகுதி சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில், 6வது தகுதி சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 74 ரன்கள் எடுத்தார்.

இதை தொடர்ந்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, இலங்கை அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல 17.1 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் நமிபியா அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இலங்கை அணி தற்போது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.