எதிரிகளையும் துரோகிகளையும் விரட்டியடிப்போம் – வீர சபதம் எடுத்த ஈபிஎஸ்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு நாளையொட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆறாம் ஆண்டு நினைவு நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது, “எதிரிகளை விரட்டியடிப்போம், துரோகிகளை தூள் தூளாக்குவோம். நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு வீறுநடை போடுவோம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என சபதம் ஏற்கிறோம். அதிமுக என்பது ஆயிரங்காலத்து பயிர், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி தொண்டாற்றி தழைத்து நிற்கும் ஆலமரம், இதை அசைத்து பார்க்க முடியுமா? உடைத்து பார்க்க முடியுமா? கழகத்தை கட்டிக்காப்போம்.
இந்திய சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா. வருகிறது நாடாளுமன்ற பொதுத்தேர்தல். இந்த தேர்தலில் வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிட சூளுரைப்போம்! நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்று வீர சபதம் ஏற்போம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! வெற்றிமுழக்கம் என்றே திக்கட்டும் வெற்றியை படைத்திடுவோம்; திசையெட்டும் வெற்றிக்கொடியை நாட்டிடுவோம். அதற்காக உழைத்திடுவோம். கழகத்தின் வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம். உறுதி ஏற்கிறோம்” எனக் கூறினார்.