எல்லைப் பிரச்னையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் : அமித்ஷா நம்பிக்கை.
கர்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான எல்லைப் பிரச்னையை முன்வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிக்கல் தொடர்பாக டெல்லியில் உள்ள அமித்ஷா தனது இல்லத்தில் இரு மாநில முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த விவகாரத்தில் சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவை ஏற்றுக்கொள்ள இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதில் மூத்த காவல்துறை அதிகாரியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு எல்லைப் பிரச்னை குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த பிரச்னை தொடர்பாக தலைவர்களின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.