அரசியல்தமிழ்நாடு

ஆவின் நெய் விலை வரலாறு காணாத உயர்வு – சசிகலா கண்டனம்

திமுக தலைமையிலான அரசு ஆவின் நெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூபாய் 580, லிருந்து 630 ஆக உயர்த்தியிருப்பது யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் ஆவின் நெய் விலையை 630 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது. இதன்மூலம் ஆவின் நெய் விலையினை ஒரு லிட்டருக்கு 115 ரூபாய் அளவுக்கு உயர்த்தியுள்ளது. தனது பத்தொன்பது மாத ஆட்சிக் காலத்தில் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விலையை உயர்த்தி, ஒட்டுப்போட்ட தமிழக மக்களுக்கு தாங்க முடியாத துயரத்தை பரிசாக அளித்திருக்கிறது. மேலும், தற்போது உள்ள ஆவின் நெய் விலையானது, தனியார் நிறுவனங்களில் உள்ள நெய்யின் விலையை விட கூடுதலாக இருப்பதால், திமுக தலைமையிலான அரசு தனியார் நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு மறைமுகமாக உதவுவதாகத்தான் எண்ணத்தோன்றுகிறது.

இதுபோன்று ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாதா மாதம் உயர்த்திக்கொண்டே போனால், ஆவின் பொருட்களை பயன்படுத்துகின்ற சாமானியர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்துவிடும். அதன்பின்னர், ஆவின் நிர்வாகத்தையே இழுந்து மூடும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என்று திமுக தலைமையிலான அரசுக்கு எச்சரிக்கிறேன். மேலும் பண்டிகைக் காலமாக இருப்பதால் அதிக விலை கொடுத்து ஆவின் நெய்யை வாங்குகின்ற பயனாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் ஏற்கனவே புயல் மழை வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டு நிற்கும் ஏழை எளிய சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட ஆவின் நெய் விலையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Image