கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது..! அதிரடி காட்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள்
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் உமர் பாரூக், பெராஸ்கான் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே 9 பேர் கைதான நிலையில் மேலும் 2 பேரை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.கோவையை சேர்ந்த ஷேக் இதயத்துல்லா மற்றும் சனோஃபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.