அரோகரா..விண்ணை பிளந்த பக்தர்களின் முழக்கம் விமரிசையாக நடைபெற்ற தைப்பூச தேரோட்டம்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமி எழுந்தருளல், புறப்பாடு நிகழ்வுகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தலும், தொடர்ந்து மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து மாலையில் தௌப்பூச தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேரை, ஏராளமான பக்தர்கள் திரண்டு ரத வீதியில் வடம் பிடித்து இழுத்து வந்தனர். திருத்தேரில் வீற்றிருந்த வண்ணம் அருள்பாளித்த பழனி முருகனை, ‘அரோகரா… அரோகரா..’ முழக்கம் விண்ணை பிளக்க சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தைப்பூச தேரோட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்திருந்தனர்.
பக்தர்கள் மலைக்கோயில் முதல் அடிவாரம் வரை திரண்டிருந்ததால், எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளியளித்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பக்தர்களின் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் உள்ளடக்கிய 3000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.