உலகம்

துருக்கி, சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் : 15,000ஐ தாண்டியது பலி எண்ணிக்கை..

துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த நாடே உருகுலைந்து போயுள்ளன. கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.5 என்கிற அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களாலும், 40 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளாலும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சுக்குநூறாகியுள்ளன. எங்கு பார்த்தாலும், கட்டிடக் குவியல்கள், மனித உடல்களாக காட்சியளிக்கின்றன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. இதில், துருக்கியில் 12,391 பேரும், சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகள் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு நிரம்பி வழிகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 70 நாடுகள் துருக்கி , சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. பல நாடுகளில் இருந்து சென்றுள்ள மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க போராடி வருகின்றனர்.

பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ளதால், இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்களாக கிடைக்கின்றன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் உறவுகளை, உடைமைகளை இழந்த பலர் கடும் குளிரில் எங்கு செல்வது என்றே தெரியாமல் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேநேரம் சாலைகள் சிதைந்து கிடப்பதால் மீட்புக் குழுவினரால் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிடைக்கின்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்து , கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.