அரசியல்தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை..!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் உள்ள பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கடந்த எட்டு ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022ல் வெளியிடப்பட்டது. சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளுக்கும், அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.