தமிழகத்தில் ஏப்.28ம் தேதி பள்ளிகளுக்கு கடைசி வேலைநாள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது . 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று ( ஏப்ரல் 6) முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10, 11, 12 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் காரணமாக ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதால் பள்ளிகளில் மற்ற வகுப்புகள் அரைநாள் மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறிருப்பதாவது :
அனைத்து அரசு , அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1-3 வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 17 முதல் 21-ம் தேதிவரை இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4-9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 10 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு உள்ளூர் நிலைக்கேற்ப ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 28க்குள் இறுதித்தேர்வு நடத்த வேண்டும். ஏற்கனவே 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலை நாள்” என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.