தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..! முழு விவரம் இதோ..

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்டு, அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதியே ஆளுநர் ஒப்புதலுக்காக மீண்டும் மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மார்ச் 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த மசோதாவின்படி, ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.