இந்தியா

குஜராத் மாநிலத்தில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!

குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.

தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது. மேலும் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா மக்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கிடையே உள்ள தொடர்பை கொண்டாடும் வகையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏப்ரல் 18-ந்தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறும் என பிரதமர் மோடி முன்னதாகவே அறிவித்தார். அதன்படி குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நேற்று தொடங்கிய சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தொடங்கி வைத்தார். சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் குஜராத் சென்றனர். இவர்களுக்காக மதுரையில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திரா பட்டேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசுகையில், இந்த விழா தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையேயான பிணைப்பை எடுத்துக்காட்டுவதோடு, இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் வலிமையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை போன்று நமது கலாசார பாதுகாப்பும் முக்கியம் வாய்ந்தது. ஒரு தேசத்தின் அடையாளத்தை அப்படியே வைத்திருக்க எல்லைகள் மற்றும் பிற விஷயங்களின் பாதுகாப்பு எப்படி தேவைப்படுகிறதோ, அதைப்போல தேசத்தின் அடையாளத்தைத் தக்கவைக்க அதன் கலாசார பாதுகாப்பும் அவசியம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சவுராஷ்டிராவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் இடையே வலுவான உறவு உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை, பரமக்குடி, திண்டுக்கல், சேலம், தஞ்சை, கும்பகோணம், போன்ற பல ஊர்களில் சவுராஷ்டிராகாரர்கள் கல்வி நிறுவனங்களை தொடங்கி சிறப்பான கல்வி சேவை வழங்கி வருகிறார்கள். இதனால் சமூகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. தாய்மொழி சவுராஷ்ட்ரீயாக இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு ஒன்றிய வாழ்க்கையில் இருப்பதால் தமிழ் மொழியையும் தங்களது மொழியாகவே பாவித்து தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து 288 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பு மிகவும் பழமையானது மற்றும் வலுவானது. இந்த சங்கமம் விழா கலாச்சார இணைப்புகளையும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வையும் ஊக்குவிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.