ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு..! நிதியுதவி பெற சென்றபோது நேர்ந்த சோகம் சம்பவம்..
ஏமன் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு, ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசு , பழைய அரசை மீண்டும் கொண்டு வர நடத்திய மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலகின் மிகப் பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவையை எதிர்பார்த்து உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையறிந்து ஏராளமான பொதுமக்கள் நிதியுதவியை பெற கூடியிருந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் , முறையான திட்டமிடல் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி தெரிவித்துள்ளார்.
நிதியுதவியை பெற மக்கள் ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஆனால் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதாகவும், அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்ததாக கூறுகின்றனர். இதனால், அச்சமடைந்த மக்கள் நாலாபுறமும் தெரித்து ஓடியதில் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிருபர்கள் உள்பட மக்கள் யாரையும் உள்ளே விடாமல் பள்ளியை பூட்டிவிட்டதாக கூறப்பட்டுகிறது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.