தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகருக்கு சீமான் செலுத்திய தங்க வேல் உண்மையில் தங்கமா..? முழு விவரம் இதோ..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காணிக்கையாக 2 அடி உயரமுள்ள 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வேலை செலுத்தியதாக கூறப்பட்ட நிலையில் அது தங்க
முலாம் பூசப்பட்ட வேல் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்றார்.

பட்டு வேட்டி பட்டு அங்கவஸ்திரம் அணிந்து பாரம்பரிய முறைப்படி சென்ற சீமான், கடலில் கால் நனைத்து விட்டு. தனது மனைவி கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் மற்றும் கட்சியினர் புடைசூழ திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்றார்.

At Tiruchendur Subramanya Swamy Temple Darshan of Seeman Sami with family |  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்குடும்பத்துடன் சீமான் சாமி தரிசனம்

கோவிலில் இருந்த குருக்களிடம் வேல் ஒன்றை கொடுத்து காணிக்கையாக செலுத்த வந்திருப்பதாக கூறி 2 அடி உயரமுள்ள தங்க நிறத்திலான வேல் ஒன்றை ஒப்படைத்தார். அந்த வேல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.

சீமான் காணிக்கையாக செலுத்திய வேல் குறித்து தலைமை குருக்களிடம் கேட்ட போது, அது 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வேல் என்று சீமான் தன்னிடம் தெரிவித்ததாக கூறிய குருக்கள், வேல் கணமாக இல்லாமல் கூடு போல இருந்ததாகவும் தெரிவித்தார்.

தங்கம் எப்போதும் கனமாக இருக்க கூடியது என்பதால் காணிக்கையாக செலுத்தப்பட்ட வேல் குறித்து எழுந்த சந்தேகத்துக்கு விடைதேடி நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் விசாரித்தோம்.தங்கம் வாங்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்று தெரிவித்த நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 வது ஆண்டு என்பதால் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வேல் காணிக்கையாக செலுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தனர்.