விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சி.எஸ்.கே..? முதல் தகுதி சுற்றில் இன்று குஜராத் அணியுடன் மோதல்..

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மற்ற அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகள் பெற்று, 2-வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் முதல் தகுதி சுற்று இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு செல்லும்.

நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் வெளியேறுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறும்.

இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த அணியும், வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய போட்டி சென்னையில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இதுவரை இவ்விரு அணிகளும் 3 முறை மோதியுள்ள நிலையில், அதில் குஜராத் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணிக்கு பதிலடி கொடுப்பதோடு, இறுதிப்போட்டிக்கு முன்னேற சென்னை அணி முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.