அரசியல்இந்தியா

குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்..! இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூசன் சரண் சிங் பகிரங்க அறிவிப்பு..

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூசன் சரண் சிங் மீது 17வயது சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் காவல்துறையோ விளையாட்டு அமைச்சகமோ புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஜனவரி மாதம் முதலே சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகளும், சக வீரர்களும் பலகட்ட போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் சாலையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால்பிரிஜ் பூஷன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இதற்கிடையே அவரை கைது செய்யாததை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீதே, கடந்த மே 28ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நிகழ்ந்தபோது, காவல்துறை கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டு குண்டுகட்டாக போராட்டக்காரர்களை கைது செய்தது.

முதல் தகவல் அறிக்கையில் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகாட் ஆகியோருடைய பெயரும் சேர்க்கப்பட்டு அவர்கள்மீது 147, 149, 186, 188, 332, 353 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்துள்ளது. அன்றைய தினம் ஜந்தர் மந்தரில் இருந்த 109 போராட்டக்காரர்கள் உட்பட டெல்லி முழுவதும் 700 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசி எறிய போகிறோம் என வீரர், வீராங்கனைகள் அறிவித்தும் மத்திய அரசு அமைதிகாக்கிறது.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங், “என் மீது வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட நானே தூக்கிட்டு கொள்கிறேன். நீதிமன்றத்தில் ஆதாரத்தை கொடுங்கள். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். எந்த தண்டனையையும் ஏற்க தயார்” எனக் கூறியுள்ளார் .