ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பயபக்தியுடன் தரிசனம் செய்த ஜப்பான் நாட்டு பக்தர்கள்..!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்து சமய பக்தர் மசாஹி(60). இவர் மருத்துவ அறிவியல் மற்றும் இயற்பியலில் முனைவர் பட்டங்கள் பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளாக இந்து மதம், இந்து கடவுள்கள் குறித்து பிரச்சாரம் செய்தும் வருகிறார்.
மசாஹியின் தலைமையில் 18 பெண்கள் உட்பட 37 ஜப்பானியர்கள் `ஆன்மிக தேடல்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நேற்று வந்த மசாஹி தலைமையிலான ஜப்பானிய பக்தர்கள் 37 பேர் தீர்த்தங்களில் தீர்த்தமாடி சுவாமிக்கு ருத்ரா அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து செங்கோல் ஏந்தி சந்நிதியை வலம் வந்தனர்.
இதுகுறித்து மசாஹி கூறியது: கடவுள் ஒருவர் என்பதே எங்களின் நம்பிக்கை. ஆனால் கடவுளின் பெயர்களும், வழிபடும் முறைகளும் இடத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இந்தியாவில் கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறைகளும் உண்மையாக உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோயிலுக்கு வந்தேன். அப்போது சிறந்த ஆன்மிக அனுபவம் கிடைத்தது. தற்போது 37 பேருடன் ஜப்பானிலிருந்து ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்திருக்கிறோம். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் எங்களுக்குசிறப்பான தரிசனம் கிடைத்தது. தீர்த்தங்களில் நீராடிய அனுபவமும் இனிமையாக இருந்தது என்றார்.