ஆளுநருக்கு புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பல்வேறு கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமது உரையில் தமிழ்நாட்டின் கல்வி தரம் குறைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்துவதையும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த விமர்சனங்களுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் மற்றும் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் வெற்றிகரமான தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலை தொடர்பான கருத்துகளை ஆளுநர் ரவி மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளையும் தொழிலாளர்களையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
அதிகமான முதலீடுகளை தொடர்ச்சியாக தமிழ்நாடு பெற்று வருகிறது. மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படியே தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை வழங்கி வருகிறது.
இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலம். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் பல தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. Hyundai , Renault Nissan, Mitsubishi, Pou Chen உள்ளிட்டவை தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன.
மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி கூட முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வரும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டார். இவ்வாறு அமைச்சர் டிஆர்பி ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.