இந்தியா

பிபர்ஜாய் புயல் எதிரொலி..முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 67 ரயில்கள் ரத்து..!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று மெல்ல வடக்கு – வட கிழக்கு நோக்கி நகர்ந்து மிக தீவிர புயலாகவும், அதி தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இதன் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த புயலுக்கு வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.

இந்நிலையில் இன்று காலை அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த பிபர்ஜாய் புயல் தீவிர புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப்புயல் தற்போது போர்பந்தருக்கு 290 கிலோமீட்டர் தென்மேற்கில் மையம் கொண்டுள்ளது. நாளை மறுநாள் மாலை( ஜூன் 15) ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே சௌராஷ்டிரா – கட்ச் கடற்பகுதி இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் குஜராத்தில் உள்ள ஆறு மாவட்ட கடலோர பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரப் பகுதிகளில் வசித்த சுமார் 10,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும், கடுமையான மழைபொழிவு இருக்கும் என்பதாலும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.