தமிழ்நாடு

முதல் மரியாதை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் கைது

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 முதல் 2006 வரை சமயநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பொறுப்பில் இருந்துள்ளார்.. இந்த சூழலில் பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோயில் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் முடிவடைந்தது .

இந்த கோயிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகனுக்கும், முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேல்முருகன் தரப்பினர் திடீரென முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் வீட்டிற்கு சென்று மனைவி பழனியம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினர் இருந்தபோதே வீட்டில் கல்லை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் ஜன்னல்களையும் ,டிவி, பிரிட்ஜ் ,பைக் ஆகியவற்றையும் உடைத்துள்ளனர். அத்துடன் பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதன் காரணமாக பொன்னம்பலத்தின் உறவினர்களான பழனிக்குமார், வேல்விழி ,சுப்பையா, விஜய் ஆகிய நான்கு பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் இரு தரப்பினர் இடையேயான மோதல் விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக கிளை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மதுரை மாவட்டம் கருவனூரில் கோவிலில் முதல் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 3 பேர் கைதாகியுள்ளனர்.மற்றொரு தரப்பில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன், செந்தமிழன், ராஜமோகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் முன்னாள் எம்எல்ஏவின் கார் எரிக்கப்பட்டதோடு, அவரது உறவினர்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது.