விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று பிற்பகல் (25.7.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முருகேஸ்வரி, க/பெ.ராமச்சந்திரண் (வயது 39) மற்றும் மண்குண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பானு, க/பெ.சண்முகம் (வயது 39) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனணையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
