இம்ரான் கானை கொலை செய்ய சதி திட்டம் – மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் வைத்து கொலை செய்ய சதி நடப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கான் ஒரு நேர்மையற்ற மனிதர் என கருத்து தெரிவித்த நீதிமன்றம் இஸ்லாமாபாத் ஐஜி, இம்ரான் கானை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இம்ரான் கானை சிறையில் வைத்து கொலை செய்ய சதி நடப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் கானை படுகொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது எனவும், இன்னும் அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது எனவும் கூறியுள்ளார். சிறையில் விஷம் கொடுத்து கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.