ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்..!
சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதுதொடா்பாக அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலாளர் கரின் ஜான் பியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
“ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர உள்ளாா். செப். 7 முதல் செப்.10-ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருப்பார். இந்த மாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரால் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தூய்மையான எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவது உள்பட உலகளாவிய பிரச்னைகளை கையாள்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து அதிபர் பைடன் உள்ளிட்ட தலைவா்கள் விவாதிக்க உள்ளனர்.
வறுமை ஒழிப்பு, உலக வங்கி உள்பட பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.