தீபாவளிக்கு ஆவின் கொடுக்கப்போகும் செம சர்ப்ரைஸ்..! முழு விவரம் இதோ..
தீபாவளியையொட்டி தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பான தரமான சர்ப்ரைஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பால் மட்டுமின்றி பால் சார்ந்த பிற பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற அண்டை மாநிலங்களுக்கும் இந்த பொருட்கள் விற்பனையாகி வருகின்றன.
ஆவின் சார்பில் பால் ஐஸ்கிரீம், ஸ்வீட்கள், நெய், தயிர், பன்னீர், வெண்ணெய், பால்கோவா உள்பட 100க்கும் அதிமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் ஆவின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ஆவினில் தொடர்ந்து புதிதாக பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பண்டிகை காலங்களின்போது ஆவின் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி சுவைக்கின்றனர். குறிப்பாக தீபாவளி சமயத்தில் பொதுமக்கள் ஆவின் இனிப்புகளை அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் தான் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் சார்பில் பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :
‛‛ஆவினில் நாள்தோறும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் பால் உற்பத்தி செய்வோருக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக கொடுத்துவிட்டோம். மேலும் அவர்களுக்கு 10 நாளுக்கு ஒருமுறை பணப்பட்டுவாடா செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பால்வழங்கும் இடத்திலேயே அவர்களுக்கான பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது எல்லாம் நிலுவையில் இருந்த கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை தற்போது நிறைவேற்றி உள்ளோம். வரும் தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 25 சதவீதம் வரை பால் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கடந்த முறை தீபாவளியின்போது நல்ல விற்பனை இருந்தது. இதனால் மக்களுக்கு ஆவின் பொருட்கள் கிடைக்கும் வகையில் கூடுதலாக உற்பத்தி செய்ய உள்ளோம். இதுமட்டுமின்றி அனைத்து பொருட்களும் மேம்படுத்தப்பட்ட தரத்தில் தயாரித்து வழங்கப்பட உள்ளது” என்றார்.
இந்த வேளையில் தீபாவளியில் புதிதாக ஏதேனும் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛தற்போது ஆவினில் ஏராளமான பொருட்கள் உள்ளன. அவற்றை இன்னும் மேம்படுத்தப்பட்ட தரத்தில் வழங்க இருக்கிறோம்” என்றார். மேலும் ஐஸ்கிரீம் விற்பனை பற்றி கேட்டபோது, ‛‛ஐஸ்கிரீம் விற்பனை நன்றாக உள்ளது. நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. பிரிமீயம் ஐஸ்கிரீம் உலகத்தரத்தில் இருப்பதாக கருத்துகள் வருகின்றன. ஆவின் உபபொருட்களின் விற்பனை நன்றாகவே இருக்கிறது” என தெரிவித்தார்.