முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
10 ஆண்டுகளுக்கு பிறகு சத்துணவும் சமச்சீர் கல்வியும் பெற்ற மாணவ சமுதாயத்தை தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்குவதே முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் நோக்கம் என தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது :
பள்ளி மாணவர்களுக்கு சரியான நேரத்தில் காலை உணவு கிடைக்காவிட்டால் அவர்களது கல்வி வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு மிகச் சிறப்பான வரையறைகளுடன் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவு திட்டம்.

இந்த திட்டத்தை முதல் கட்டமாக கடந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எனது தொகுதியில் தொடங்கி வைத்து சிறப்பான ஆரம்பத்தை ஏற்படுத்தி கொடுத்தார். படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு எனது தொகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.
ஒரு அரசின் நிதிநிலை மற்றும் நிதி பற்றாக்குறை போன்றவற்றை பேசுகிற அதே நேரத்தில் ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அது எந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்படுகிறது எந்த இலக்கிற்காக செலவு செய்யப்படுகிறது என்பதை பொறுத்து அதன் பலன் அமையும் அதன்படி இந்த காலை உணவு திட்டத்திற்கு எத்தனை செலவு செய்தாலும் அது பலன் உள்ளதாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு சத்துணவுமும் சமச்சீர் கல்வியும் பெற்ற மாணவ சமுதாயத்தை தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்குவது இந்த காலை உணவுத் திட்டத்தின் நோக்கமாகும் இது மிகச் சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது .
மாநகராட்சி பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு 12 ரூபாய் 40 பைசா செலவழிப்பதாக சொல்கிறார்கள் உண்மையில் ஒரு மாநகராட்சிக்கு 20 லட்சம் இதன் மூலம் செலவினங்கள் ஏற்பட்டாலும் அவை சிறந்த செலவாகவே இருக்கும். இரண்டரை ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ள போதிலும் அதில் முத்தாய்ப்பான திட்டமாக இந்த காலை உணவு திட்டம் திகழும் என கூறினார்.