அரசியல்தமிழ்நாடு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 6ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்து 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மறைவுக்கு பின் , 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தி.மு.கவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 15வது உட்கட்சித் தேர்தலில் மீண்டும் 2வது முறையாக திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார்.

இந்நிலையில் திமுகவின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின், இன்று 6வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி திமுகவினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் மு.க.ஸ்டாலின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

MK Stalin: Often Get Asked Whether My Son And I Are Brothers

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிருப்பதாவது :

தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாம் நம் தி.மு.கழகத்தின் தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் நம்மையெல்லாம் வழிநடத்தவுள்ளார்கள்.

அரை நூற்றாண்டு காலம் இயக்கத்தை கட்டிக்காத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழி நின்று கழகத்தின் கொள்கையாலும், ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்களாலும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி வருகிறார் நம் கழகத்தலைவர் அவர்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் – 2021 சட்டமன்றத் தேர்தல் – உள்ளாட்சித் தேர்தல் என களம் கண்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்த அயராது உழைப்போம் .என்று குறிப்பிட்டுள்ளார்.