கண் திருஷ்டி நீங்க துர்கை அம்மனை இப்படி வழிபட்டு பாருங்கள்..!
பொதுவாக ஒரு குடும்பம் முன்னேற்ற நிலைக்கு சென்றால் அந்த குடும்பத்திற்கு தான் அதிக கண் திருஷ்டி ஏற்படும். இந்த பொருள் வாங்கி விட்டார்கள், அங்கே போகிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று யாராவது ஒருவர் நினைத்தாலும் அதன் மூலமாக கண் திருஷ்டி என்பது ஏற்படும்.
கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டால் அவர்களின் குடும்பத்தில் அதுவரை இருந்து வந்த சந்தோஷ நிலை மாறி, சங்கடங்கள் ஏற்படும் என்பது வழக்கம் . அந்த சங்கடங்களை தீர்ப்பதற்கு வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியை முதலில் நீக்க வேண்டும். கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துர்க்கை அம்மனை வீட்டிலேயே வழிபடுவதன் மூலம் கண் திருஷ்டியை எவ்வாறு விலக்குவது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பெண் தெய்வங்களில் உக்கிரமான தெய்வமாக கருதப்படும் தெய்வங்களில் ஒருவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை நாம் வழிபட்டால் நமக்கு வரக்கூடிய சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபாடு செய்ய செய்கிறோம். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை நாம் வீட்டில் எப்படி வழிபடலாம் என்று பார்ப்போம்.
இந்த வழிபாட்டை நாம் இரவு எட்டு மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாளோ அல்லது தினமும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். நம் விருப்பம் தான். வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்திற்கு முன்பாக குங்குமத்தில் நட்சத்திரம் வரைய வேண்டும். அந்த நட்சத்திரத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன் காம்பு கிழக்கு அல்லது வடக்கு முகம் பார்த்தவாறு நட்சத்திரத்திற்கு நடுவில் வைக்க வேண்டும்.
எந்த பூஜையை நாம் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்க வேண்டும் அல்லவா? அதனால் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு ஒரு அருகம் புல்லையும் வைத்து, வெற்றிலையின் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். அவருக்கு நெய்வேத்தியமாக தனியாக சிறிது கற்கண்டை வைத்து விடுங்கள். இப்பொழுது புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து வெற்றிலையின் நடுவில் வைக்க வேண்டும்.
இந்த எலுமிச்சம் பழத்தை நாம் துர்க்கை அம்மன் ஆக பாவிக்க வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் தும் துர்க்கையே நமஹ” என்று 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு துர்க்கை அம்மனுக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை வைத்து, தூபம் காட்டி, பிறகு கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.
பிறகு நாம் அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து நாம் வைத்துக் கொண்டு, பிறகு நம் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரின் நெற்றியிலும் வைக்க வேண்டும். அடுத்ததாக நம் வீட்டு வாசலில் அதாவது நிலை வாசலின் மேலே இந்த குங்குமத்தை வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் வாகனங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கும் இந்த குங்குமத்தை வைக்க வேண்டும்.
இவ்வாறு நாம் அர்ச்சனை செய்த குங்குமத்தை வைப்பதன் மூலம் நமக்கு இதுவரை இருந்து வந்த கண் திருஷ்டிகள் அனைத்தும் விலக துர்க்கை அம்மன் அருள் செய்வார். இதையடுத்து நாம் துர்க்கை அம்மனாக பாவித்த அந்த எலுமிச்சம் பழத்தை மறுநாள் காலையில் எடுத்து இரண்டாக நறுக்கி குங்குமம் வைத்து வாசலில் வைக்கவும்.