ஆவின் பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் மனோ.தங்கராஜ்
ஆவின் பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பால் முகவா்களிடம் கமிஷன் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் குறித்து புகாா் செய்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக தினமும் 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் நேற்று பால் உற்பத்தி, பால் பண்ணை மேம்பாட்டு துறை சார்பில், பால் உற்பத்தியாளர்கள் தொடக்க கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதனை மாநில பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :
ஆவின் நிறுவனத்தை அடுத்த கட்ட வளா்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில், நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஊழியா்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை மண்டலத்தில் இரு கட்டப் பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தன. தற்போது மதுரை மண்டலத்தில் உள்ள 8 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தின் பல்வேறு பிரச்னைகள் படிப்படியாகத் தீா்க்கப்படுகின்றன. கடந்த காலங்களில் பால் கொள்முதல் தினசரி 26 லட்சம் லிட்டா் என்று இருந்த நிலையில், தற்போது இது 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. பால் விநியோகத்தில் நிலவிய பிரச்னைகள் களையப்பட்டுள்ளன. மேலும், பாலின் தரத்துக்கேற்ற விலை என்று புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதலாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக விவசாயிகளுக்கு பாலின் தரத்தை அறியும் கருவி ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டது. பால் உற்பத்தி குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மேலும், இதுவரை இல்லாத வகையில், ஆவின் நிறுவனத்தின் லாபத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு பங்குத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவைக் கணக்கில் கொண்டு கொள்முதல் விலையை நிா்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நெய், வெண்ணெய், பால்கோவா போன்ற பால் பொருள்களின் தேவையைக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தியாளா்களுக்கு 10 நாள்களுக்குள் பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பால் பாக்கெட்டுகளில் கசிவு, சேதமடைதல் போன்றவை 2 சதவீதமாக இருந்தது. இது தற்போது 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவின் பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பால் முகவா்களிடம் கமிஷன் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் குறித்து புகாா் செய்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
