தமிழ்நாடு

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் – மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

எண்ணூர் கழிமுகத்தில் கடந்த 4.12.2023 அன்று மணல் தொழிற்பேட்டை வழியாக வரும் பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய் கழிவுகள் கலந்து வரத் தொடங்கின. இந்த கழிவுகள் மழைவெள்ள நீரில் கலந்து நீர்தேங்கிய இடங்களில் உள்ள வீடுகள், கடைகள், மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட அனைத்திலும் படிந்தன.

இதன் காரணமாக கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுகம், தழங்குப்பம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கழிவுகள் படிந்தன. மீன்கள், நண்டுகள், பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் செத்து மிதந்தன. பல கரையோர மீனவ சமுதாயத்தினரின் வீடுகளுக்குள் நுழைந்த எண்ணெய் கலந்த நீர், அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைப் பாதித்து அவர்களின் படகுகளில் எண்ணெய் படிந்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மோசமாகப் பாதித்தது.

இந்நிலையில், சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ. 12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. எண்ணெய் கசிவு விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மீன்வளத்துறை பதில் அளித்துள்ளது.