அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை சரி செய்ய மதிப்பீடு தயார் செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், உடன்குடி, புன்னைக்காயல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை துறை அலுவலர்களுடன் நேரடியாக கள ஆய்வு செய்து முடித்த பின், நேற்று அது குறித்த ஆய்வு கூட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களிடம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வறிக்கையினை சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :

வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, மெய்ஞானபுரம், போன்ற பகுதிகளில் வெள்ளம் வடிந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புன்னைக்காயல், பரமன்குறிச்சி, மெய்ஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர்பந்தல் பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை துவங்க தேசிய நெடுஞ்சாலை துறையின் முதன்மை பொறியாளரிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.

ஆத்தூரன்கால் மற்றும் தாமிரபரணி நீரோட்ட பாதைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யவும், சடயநேரி குளம் & கடம்பன்குளம் உடைப்புகளை நிரந்தரமாகச் சரி செய்யவும், புன்னைக்காயல் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களை பலப்படுத்தவும், தேவைப்படும் இடங்களில் கல்வெட்டு அமைக்கவும் மதிப்பீடு தயார் செய்து உடனடியாக சமர்ப்பிக்க அறிவுறுத்தியிருக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.